குர்ஆன் 18:18 — குகை
அவர்கள் உண்மையில் உறங்கிக் கொண்டிருந்த போதும், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணியிருப்பீர். அவர்கள் நடுவே அவர்களுடைய நாய் அதன் முன்னங்கால்களை விரித்திருந்த அதே சமயம், அவர்களை நாம் வலப்புறமும் மற்றும் இடப்புறமும் புரட்டினோம். அவர்களை நீர் பார்த்திருந்தால், திகிலினால் அறையப் பட்டவராக, அவர்களை விட்டு நீர் வெருண்டோடி இருப்பீர்.
[18:17] அவர்கள் அதிலுள்ள குழியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரியன் அதன் உதயத்தின் போது அவர்களுடைய குகையின் வலப் புறமிருந்து வந்து கொண்டிருந்ததையும், மேலும் அதன் அஸ்தமனத்தின் பொழுது அவர்களுடைய இடப்புறமிருந்து பிரகாசித்ததையும் நீர் கண்டிருக்க இயலும். இது கடவுள்-ன் அற்புதங்களில் ஒன்றாகும்*. எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவரே உண்மையில் வழிநடத்தப்பட்டவர், மேலும் எவரொருவரை அவர் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ அவருக்கு வழிகாட்டும் ஓர் ஆசிரியரை நீர் காணமாட்டீர்.
[18:19] அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பிய போது, அவர்கள் ஒருவரை ஒருவர், “எத்தனை காலம் நீங்கள் இங்கே இருந்தீர்கள்?” என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் “ஒரு நாளோ அல்லது நாளின் பகுதியோ நாம் இங்கிருந் தோம்,” என்று பதிலளித்தனர். “நாம் எவ்வளவு காலம் இங்கே இருந்தோம் என்பதை உம்முடைய இரட்சகர் மிக நன்றாக அறிவார், எனவே இந்தப் பணத்துடன் நம்மில் ஒருவரை நாம் நகரத்திற்கு அனுப்புவோம். அவர் தூய்மைமிக்க உணவை போய் கொண்டு வரட்டும், மேலும் நமக்காகவும் சிலவற்றை வாங்கி வரட்டும். அவர் தன் முகத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமலும், மேலும் எவர் கவனத்தையும் ஈர்க்காமலுமிருக்கட்டும்.